Published : 25 Apr 2020 03:31 PM
Last Updated : 25 Apr 2020 03:31 PM

கரோனா தொற்று சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முயற்சி: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம் 

கரோனா தொற்று சூழலை சமாளிக்க ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்வராத மோடி அரசு இப்போது ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பறித்து உத்தரவிட்டிருக்கிறது. இது அநீதி ஆகும் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 21 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு நிதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களுக்குரிய அகவிலைப்படியைப் பிடித்தம் செய்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்த ஆண்டுக்கான மத்திபட்ஜெட்டில் பிரதமருக்கான புதிய வீடு கட்டும் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கு 20,000 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இப்படியான திட்டங்களை நிறுத்தி வைத்து அதைப் பயன்படுத்தினாலே ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்ய முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்வராத மோடி அரசு இப்போது ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பறித்து உத்தரவிட்டிருக்கிறது. இது அநீதி ஆகும். எனவே, இந்த முடிவை ரத்து செய்து மத்திய அரசு ஊழியர்களுக்குச் சேரவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மோடி அரசு பதவியேற்றதும் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு ஐந்து சட்டங்காளக அறிவிப்புச் செய்தது. அந்த சட்டதொகுப்புகளாக புதிய சட்டங்களைக் கொண்டு வரும் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டார் பின்னர் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இதனிடையில் இந்த மசோதாக்களை அவசர சட்டங்களாகப் பிறப்பிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது. இந்த புதிய சட்டத் தொகுப்புகளில் ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு இருந்த பல்வேறு பாதுகாப்புக் கூறுகள் அகற்றப்பட்டு தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பலரும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், இத்தகைய தொழிலாளர் விரோத சட்டங்களை அவசர சட்டங்களாகப் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது கரோனா நோய்த்தொற்று சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தெளிவாகத் தெரிகிறது.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிலாளர் விரோத, அரசு ஊழியர்களுக்கு எதிரான இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையேல், நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுமென்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x