

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அறிவித்த தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் நகரத்திலுள்ள வாடகை கார் ஓட்டுநர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பந்தல் அமைக்கும் தொழிலாளர்களுக்கு அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் இளையரசனேந்தலில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர். தொழிற்சாலையில் சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணிபுரிவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இளையரசனேந்தலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முதற்கட்டமாக 19 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் நலம் பெற்று இன்று வீடு திரும்பி உள்ளனர்.
இன்னும் சிலர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார்கள் என மருத்துவத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிவாரண உதவி வழங்கப்பட்ட தொழிலாளர்களில், தீப்பெட்டி தொழிலாளர்கள் விடுபட்டது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார். தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் அவர்.