Published : 25 Apr 2020 02:53 PM
Last Updated : 25 Apr 2020 02:53 PM

பட்டினியால் வாடுபவர்களுக்கு உணவக உரிமையாளர்கள் இலசவ உணவு வழங்கக்கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

ஊரடங்கால் பட்டினியால் வாடும் ஏழை, எளியோருக்கு உணவக உரிமையாளர்கள் இலசவ உணவு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இரா.சிவசங்கர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

"கரோனா ஊரடங்கால் ஏழை, எளிய கூலி்த்தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் உணவு சரிவர கிடைக்காமல் குழந்தைகளுடன் பல குடும்பங்கள் பட்டினியால் தவித்து வருகின்றன. இதேபோல சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரிந்து வந்த தமிழக மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ஆனால், உணவு பதார்த்தங்களுக்கு பொதுமக்களிடம் அதிகளவில் பணம் வசூலித்து கொள்ளை லாபம் ஈட்டிய உணவக உரிமையாளர்கள் தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் மனிதாபிமான அடிப்படையில் எந்தவொரு உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் நினைத்தால் தங்களிடம் உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடியும். அதேபோல தற்போது ஊரடங்கு நேரத்தில் உணவகங்களில் பார்சல் வாங்கிச் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளதால், சில உணவக உரிமையாளர்கள் பார்சல் உணவு வகைகளுக்கு அதிகப்படியான பணம் வசூலிக்கின்றனர்.

எனவே, உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடும் ஏழை, எளியோருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கவும், பார்சல் உணவு வகைகளை குறைந்த விலைக்கு விற்கவும் தமிழகம் முழுவதும் உள்ள உணவக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தத் தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும்"

இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்.25) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சம்பத்குமாரும், அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே மாதத்துக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x