Last Updated : 25 Apr, 2020 02:41 PM

 

Published : 25 Apr 2020 02:41 PM
Last Updated : 25 Apr 2020 02:41 PM

முழு ஊரடங்கு அச்சத்தில் மதுரை புறநகர்ப் பகுதிகளில் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்கக் குவிந்த மக்கள்: கேள்விக்குறியான தனிமனித விலகல்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி எல்லைக்குள் உட்படாத புறநகர்ப் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக நினைத்து மக்கள் காய்கனி மற்றும் மளிகைக் கடைகளில் ஒரே நேரத்தில் பொருட்கள் வாங்க குவிந்ததால் சமூக விலகல் கேள்விக்குறியானது.

கரோனா பரவலைத் தடுக்க சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் ஏப். 26 முதல் 29 வரை 4 நாளும், சேலம், திருப்பூர் மாநகராட்சியில் ஏப். 26 முதல் 28 வரை 3 நாளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

இதையடுத்து சென்னை, கோவை, மதுரை மாநகராட்சியில் நாளை காலை 6 மணி முதல் புதன் கிழமை இரவு 9 மணி வரையும், சேலம், திருப்பூர் மாநகராட்சியில் நாளை காலை 6 மணி முதல் செவ்வாய் கிழமை இரவு 9 மணி வரையும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் தவிர்த்து காய்கறி மார்க்கெட் , மளிகை கடைகள் மூடப்பட்டிருக்கும். முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால் மதுரை மாநகராட்சி பகுதியில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மக்கள் மொத்தமாக குவிந்தனர். தனிமனித விலகலை பின்பற்றாமல் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கினர்.

தனிமனித விலகலைப் பின்பற்றி பொருட்கள் வாங்குமாறு போலீஸார் தொடர்ந்து ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்த போதிலும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை.

மதுரை மாநகராட்சி பகுதியில் தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் வராத பகுதிகளில் ஏற்கெனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் (தினமும் ஒரு மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்கும்) தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் மதுரை மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் புறநகர் பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நினைத்து ஒரே நேரத்தில் காய்கறி, மளிகை கடைகளில் குவிந்தனர்.

மதுரை மாநகராட்சியை ஒட்டியுள்ள புறநகர் பகுதியான ஒத்தக்கடை, கடச்சனேந்தல், கருப்பாயூரணி, நாகமலை புதுக்கோட்டை, விளாங்குடி, பறவை, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக காய்கறி மார்க்கெட்களிலும், மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரும்பாலான கடைகளில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்று தீர்ந்தன. இதனால் பல கடைகள் 1 மணிக்கு முன்பே பூட்டப்பட்டன. சாலைகள், தெருக்களில் வாகன நடமாட்டம் அதிகளவில் இருந்தன.

இதனால் புறநகர் பகுதிகளில் ஊரடங்குக்கான அறிகுறி தெரியவில்லை.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் மட்டுமே முழு ஊரடங்கு அமலில் உள்ளது, புறநகர் பகுதிகளில் வழக்கமான ஊரடங்கு தான் என்பதை அதிகாரிகள் மக்களிடம் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இதனால் மாநகராட்சி முழு ஊரடங்கை மாவட்டம் முழுவதும் என நினைத்து மக்கள் ஒரே நேரத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க குவிந்தனர் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x