

கரூர் மாவட்டம் மைலம்பட்டியில் ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒன்றுகூடிய முஸ்லிம்கள் 54 பேர் மீது தொற்று நோய்த்தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம் மைலம்பட்டி கடை வீதியில் ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக நேற்று (ஏப்.24) இரவு 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி இருப்பதாக கடவூர் வட்டாட்சியர் மைதிலிக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் மைதிலி, வருவாய் அலுவலர் பாலச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோருடன் சென்று இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள் வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிந்தாமணிப்பட்டி போலீஸாரிடம் கடவூர் வட்டாட்சியர் மைதிலி புகார் அளித்தார்.
அதன்பேரில், மைலம்பட்டியைச் சேர்ந்த சஞ்சியப்பா (60), அன்சார் அலி (43), உதுமான் அலி (70), சைலாபுதீன் (63), கம்ருதீன் (65) உள்ளிட்ட 54 பேர் மீது கரோனா நோயைப் பரப்பும் நோக்கோடு ஊரடங்கை மீறி அதிக அளவில் ஒன்றுகூடியதாக தொற்று நோய்த்தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.