விவசாய நிலத்தில் மின்கோபுரம்: இழப்பீடு தராததால் விவசாயி தற்கொலை; தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்; வைகோ

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்திற்கு இழப்பீடு தராததால் தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் மரணத்திற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிக்கையில், "விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டு செல்வதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அறப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உயர்மின் கோபுரம் அமைக்கக் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டப்படி, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர்.

ஜனவரி 21, 28, 30 மற்றும் பிப்ரவரி 29 ஆகிய நாட்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் பின்னர் மார்ச் 10 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆடு, மாடுகளுடன் முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மார்ச் 9 ஆம் தேதி, விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, உயர்மின் கோபுரம் அமைத்திட கையப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில், கரோனா கொள்ளை நோய் துயரில் மக்கள் நொறுங்கியுள்ள நேரத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, காவல்துறை அடக்குமுறை தர்பாரை ஏவிவிடுகிற தமிழக அரசுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்.

தன்னுடைய விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்திற்கு இழப்பீடு தராததால், மன உளைச்சல் அடைந்த 75 வயது விவசாயி ராமசாமி, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உயர்மின் அழுத்தக் கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்று காலையில் தெரியவந்துள்ளது.

விவசாயி ராமசாமி இறப்புக்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அக்குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

உயிரிழந்த விவசாயி ராமசாமி குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி, உரிய முறையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்தொன்றுமையை உருவாக்கி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in