Published : 25 Apr 2020 11:45 AM
Last Updated : 25 Apr 2020 11:45 AM

சென்னையில் நிலைமை மோசம்: தானாக வந்த பாதிப்பு அல்ல; நாமாக தேடிக்கொண்ட துன்பம்; ராமதாஸ் எச்சரிக்கை

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க மக்கள் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை மாநகரத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தியாவின் சுகாதாரத் தலைநகராகவும், மருத்துவச் சுற்றுலா மையமாகவும் அறியப்பட்ட சென்னை நகரம் இப்போது கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியிருப்பது வேதனையளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு சென்னையில் தான் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் கடந்த 10 நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் கூடுதலாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படும் தொற்றுகளில் பெரும்பாலானவை சென்னையில்தான் ஏற்படுகின்றன.

இதையடுத்து, சென்னையில் கரோனா வைரஸ் பரவல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பல்வேறு மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்திருக்கிறது.

கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மும்பை, புனே, தானே, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுடன் சென்னையையும் சேர்த்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு விதிகளை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றியது தான் இத்தகைய மோசமான நிலைக்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

ஊரடங்கு மீறல்கள் கட்டுப்படுத்தப்படாமல், தொடர அனுமதிக்கப்பட்டால் நோய்ப்பரவல் மேலும் அதிகரித்து நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடு ஏற்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் ஊரடங்கு ஆணையை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். வீட்டுக்குத் தேவையான பொருட்களை ஒரு வாரத்திற்குப் போதுமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை கண்டிப்பாக அணிந்து செல்லுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கியதையும், மக்கள் அதிக அளவில் வெளியில் சுற்றுவதையும் அறிந்தவுடன், அனைத்து சாலைகளிலும் சுங்கச்சாவடிகளில் இருப்பதை போன்ற தடுப்புகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கூறினேன். இது குறித்த எனது கவலைகளை நான் தெரிவித்தேன்.

ஆனாலும், பெரும்பான்மையான மக்கள் ஊரடங்கை மதிக்காததன் விளைவாகத்தான் சென்னையில் கரோனா வைரஸ் பரவல் அச்சப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கரோனா பரவலில் மும்பை, புனே, அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டதற்கும் இதுதான் காரணமாகும். இது நிச்சயமாக சென்னைவாழ் மக்கள் பெருமைப்படுவதற்கான விஷயமல்ல. இது தானாக வந்த பாதிப்பு அல்ல. மாறாக, நாமாக தேடிக்கொண்ட துன்பம் ஆகும்.

வான்புகழ் கொண்ட தமிழகத்தின் தலைநகரத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இதிலிருந்தும், கரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டு வர நாம் செய்ய வேண்டியது ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, கரோனா எதிர்ப்பு போரில் அரசுக்கு ஒத்துழைப்பது மட்டும்தான்.

சென்னையில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை உணர்ந்துதான் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது. சென்னையிலும், சென்னையின் புறநகர் மாவட்டமான செங்கல்பட்டிலும் நாளை முதல் 4 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிப்பது உள்ளிட்ட பணிகளை அரசு பார்த்துக் கொள்ளும் நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிக்க வேண்டியது நமது கடமையாகும். அதை உணர்ந்து அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மட்டுமின்றி, சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க மக்கள் முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x