

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிருமிநாசினி கசிவால் தூய்மைப் பணியாளர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களை சிகிச்சைக்கு கூட அனுமதிக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
கீழத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் லா-கூடலூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கிருமிநாசினி இயந்திரத்தைக் கொண்டு தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
அப்போது கிருமிநாசினி இயந்திரத்திலிருந்து கசிந்த கிருமிநாசினி செந்திலின் உடல் முழுவதும் பரவி, முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிப்படைந்த அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள லா.கூடலூர் ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டதாகவும், ஆனால், ஊராட்சி செயலாளரோ கிருமிநாசினியால் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்றும் அதனால் மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை என்றும் அலட்சியமாகக் கூறி பணம் எதுவும் தர முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் செந்தில். தற்போது காயம் தீவிரமடைந்து உடல் முழுவதும் பரவுவதால் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளார் செந்தில். மருத்துவமனைக்குச் சென்றாலும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, "லைசால், பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரோபைன் ஆகிய ரசாயனம் கலந்த கிருமிநாசினி தெளிக்கும்போது, தமிழகம் முழுவதும் இதேபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மேலும் செந்தில் என்னிடம் வந்தபோது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். மருத்துவமனையில் கரோனாவுக்கு முக்கியத்துவம் என்பதால் இவரைக் கண்டுகொள்ளவில்லை. 4 தினங்களுக்கு ஓய்வெடுத்தால் காயம் சரியாகிவிடும்" என்றார்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரும் கவுரவப்படுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பணியின்போது பாதிப்புக்குள்ளாகும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையிலிருந்தும் ஒருசிலர் தவறுகின்றனர்.