Published : 25 Apr 2020 10:48 AM
Last Updated : 25 Apr 2020 10:48 AM

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த ஆவணத்தையும் எதிர்பார்க்காமல் மாதம் ரூ.7,500 வழங்குக: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த ஆவணத்தையும் எதிர்பார்க்காமல் மாதம் ரூபாய் 7,500 நிதியுதவியை மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிக்கையில், "நான்கு மணிநேர வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டு, 137 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்து 34 நாட்கள் உருண்டோடிவிட்டன.

இதுவரை கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்திற்கு ஆளாகியிருக்கிற மக்களுக்கும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூபாய் 225 லட்சம் கோடியில் ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காமல் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

மக்கள் ஊரடங்கு காரணமாக ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். தற்போது மக்கள் ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடக்கம், வேலைவாய்ப்பின்மை, பெருமளவில் மக்கள் குடிபெயருதல், உற்பத்தி மற்றும் வர்த்தக முடக்கம் ஆகியவற்றினால் ஏற்படுகிற பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் 6.3 கோடி குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை வழங்கி வருகிறது. மக்கள் ஊரடங்கு காரணமாக இத்துறையில் உற்பத்தி முடக்கம் ஏற்பட்டு வருமானத்தில் 54 சதவீத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 11 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகள் எதையும் மத்திய அரசு இதுவரை செய்யவில்லை.

பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வரும்கால வைப்புநிதி இல்லை. எனவே கடும் பாதிப்பில் இருக்கும் இத்தொழிற்சாலைகளை மீட்க கடனை மறுசீரமைத்து ஒத்திவைத்தல், வட்டியைத் தள்ளுபடி செய்தல், 6 மாதத்திற்கு வரிச்சலுகைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், இதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 7,500 நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.

அதேபோல, பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் தினக்கூலியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பணிபுரிந்த இடத்திலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சமூக பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் இதுவரை வந்து சேரவில்லை. ஏனெனில், தாங்கள் பணிபுரிந்த இடங்களில் தற்காலிகமாக குடியிருக்கிற இத்தொழிலாளர்களுக்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகள் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் நிவாரண உதவிகள் பெற முடியவில்லை.

எவரிடம் வேலை செய்தார்களோ, அவர்களிடம் ஊதியம் பெற முடியாத நிலையில் பசி, பட்டினியால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் எந்த ஆவணத்தையும் எதிர்பார்க்காமல் மாதம் ரூபாய் 7,500 உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் ஊரடங்கு நேரத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவில் இருந்தும், கரோனா பாதிப்பில் இருந்தும் மீட்க தேவைப்படும் நிதியாதாரத்த்தை மத்திய பாஜக அரசு பெறுவதற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்ததாகும்.

கடந்த ஜனவரியில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறபோது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 66 டாலராக இருந்தது. கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது 21 டாலராக குறைந்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலுத்த வேண்டிய தொகையில் 40 பில்லியன் டாலர் - ரூபாய் மதிப்பில் 3 லட்சம் கோடி மத்திய அரசுக்கு மிச்சம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு கடந்த ஆறு ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச் சரிவைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஏறக்குறைய ரூபாய் 20 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.

இத்தகைய நிதியாதாரங்களைப் பயன்படுத்தி கரோனா நோயை ஒழிக்கவும், பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் மத்திய பாஜக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் முதல் கரோனா தொற்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு 84 நாட்கள் ஆகின்றன. இதுவரை கரோனா தொற்றை சோதனை செய்ய உரிய பரிசோதனைக் கருவிகளை இந்திய அரசு தேடிக்கொண்டிருக்கிறது. இது மோடி ஆட்சியின் பரிதாபகரமான தோல்வியை வெளிப்படுத்துகிறது.

இதுதான் ஒரு திறமையான ஆட்சிக்கு இலக்கணமா? எனவே சுதந்திர இந்தியா காணாத சோதனையில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமிருக்கும் அனைத்து நிதியாதாரங்களையும் பயன்படுத்தி உரிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x