

சு.கோமதிவிநாயகம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரம் வரை விலை போனது.
நடப்பாண்டில் ரூ.3500 முதல் ரூ.4000 வரைதான் விலை கிடைக்கிறது. போதிய விலை கிடைக்காததாலும், தொழிலாளர்களின் கூலி உயர்வு காரணமாகவும் விவசாயிகளுக்கு வருவாயை விட செலவு அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் பருத்தி பறிப்புக்கு முன்பே அதனை செடிகளுடன் டிராக்டர் மூலம் உழுது அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: மானாவாரி நிலத்தில் பருத்தி சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு எலி தொல்லை காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. அதே நேரம் போதிய விலையும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ரூ.150 ஆக இருந்த தொழிலாளர்களின் கூலி, தற்போது ரூ.250 முதல் ரூ.300 வரை உயர்ந்துவிட்டது.
செலவை சமாளிக்க முடியாததால் இதுவரை 100 ஏக்கர் பருத்தி செடிகள் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.