அரசு மருத்துவமனை செவிலியருக்கு கரோனா: மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு 

அரசு மருத்துவமனை செவிலியருக்கு கரோனா: மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு 
Updated on
1 min read

மதுரையில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் நேற்று வரை 52 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட 4 பேரில் 2 பேர் வண்டியூரிலும், ஒருவர் ஆணையர் எஸ்விபி நகரிலும், மற்றொருவர் டிஆர்ஓ காலனியிலும் வசிக்கின்றனர்.

டிஆர்ஓ காலனியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாளுக்கு முன் வரை மதுரை மாநகராட்சிப் பகுதியில் ‘கரோனா’வைரஸ் தொற்று கட்டுக்குள்ளாக இருந்ததாகவே சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கையுடன் இருந்தனர். மேலும், ஏற்கெனவே கரோனா கண்டறியப்பட்ட பகுதியிலே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த தொற்று வந்து கொண்டிருந்தது.

அதனால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அந்தப் பகுதிகளை முழுமையாக ‘சீல்’ வைத்து மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், நேற்று முன்தினம் மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாய்க்கு வந்ததால் புதிதாக அவர் வசித்த மேலவாசல் பகுதிக்கு கரோனா பரவியது தெரியவந்தது. தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், மீனாட்சியம்மன் கோயில் பணியாளர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நேற்று வெளியான 4 பேர் பாதிப்பில் ஒருவர் டிஆர்ஓ காலனியைச் சேர்ந்தவர் என்பதால் தற்போது அப்பகுதி புதிதாக கரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால், மதுரையில் இந்த நோய் சமூகப் பரவலை அடைந்துவிட்டதோ என்ற அச்சத்திலே தற்போது சென்னை, கோவையுடன் சேர்த்து மதுரைக்கும் வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in