

தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் நாளை மறுநாள் (26-ம் தேதி) அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் நாளை மறுநாள் (26-ம் தேதி) அனைத்து கடைகளும் அடைக்கப்படும். மருந்து கடைகள், மருத்துவமனைகள் திறந்திருக்கும். இறைச்சிக் கடைகள் மட்டும் காலை 6 மணி முதுல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் வருகிற 26-ம் தேதி மருத்துவ சேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியேறாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக வாகன அனுமதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் epass vehicle என்ற லிங்க்கில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்குவதற்று இடையூறுகள் இருப்பின் அல்லது அனுமதி தேவைப்பட்டால் tenkasiessential@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04633 290548 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு கோரிக்கை:
இதற்கிடையில், புளியங்குடியில் மக்கள் சிரமங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ள புளியங்குடியில் வசிக்கும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளிட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை, மாத்திரைகளை புளியங்குடி அரசு மருத்துவமனை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சிகிச்சைக்காக இ- பாஸ் கோரி விண்ணப்பித்தால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டயாலிசிஸ் செய்ய முடியாமல் உயிரிழப்பு கூட ஏற்படலாம். மருத்துவம் உட்பட முக்கிய தேவைகளுக்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடீரென ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் செல்லும்போது காவல்துறையினர் தடுத்து வாக்குவாதம் செய்கின்றனர். இரவு நேரத்தில் திடீரென ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லும்போது அனுமதிச்சீட்டு கோரினால் எவ்வாறு அந்த நபரின் உயிரை காப்பாற்றுவது?. இதுபோன்ற சமயங்களில் ஆம்புலன்ஸில் செல்லும் நபர்களிடம் அனுமதிச் சீட்டு கேட்பதை தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த மருந்தகத்திலும் புளியங்குடி மக்கள் அனைவருக்கும் தேவையான மற்றும் எதிர்பார்க்கும் மருந்து மாத்திரைகள் கிடைப்பது இல்லை. எனவே புளியங்குடியில் உள்ள மருந்தகங்களில் அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகள் கிடைக்குமபடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் வங்கியில் உள் தங்கள் பணத்தை எடுக்க இயலாத நிலை உள்ளது. புளியங்குடிக்கு உட்பட்ட பகுதியில் வங்கி, ஏடிஎம் இயங்கவில்லை. வெளியில் சென்று பணம் எடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே, புளியங்குடியில் நடமாடும் ஏடிஎம் சேவையை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.