

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களுக்க ஓய்வு வழங்காததால் புலம்பி வருகின்றனர்.
இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமலேயே கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனா பரிசோதனையை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் கரோனா பாதித்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்புடையவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து வருகின்றனர். மேலும் ஆய்வகங்களிலும் சளி, ரத்த மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை கண்டறிகின்றனர்.
இப்பணிகளை ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பரிசோதனை செய்யும்போது யாருக்கேனும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களை தனிமைப்படுத்தி ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களுக்கு ஓய்வு வழங்குவதில்லை.
ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களை ஒரு வாரம் தனிமைப்படுத்தி ஓய்வு கொடுக்கின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, இல்லை என முடிவு வந்தபிறகே மீண்டும் பணி வழங்குகின்றனர்.
இதேபோல் கரோனா பரிசோதனை செய்யும் தங்களுக்கும் ஓய்வு வழங்க வேண்டுமென, ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகையில், ‘மருத்துவமனைகளுக்கு அறிகுறியுடன் வருவோருக்கு மட்டுமே மருத்துவர்கள் சளி, ரத்த மாதிரிகளை எடுக்கின்றனர். ஆனால் வீடு, வீடாக சென்று மாதிரிகளை எடுப்பது நாங்கள் தான்.
மேலும் ஆய்வகங்கள் மூலம் கரோனா பரிசோதனை செய்து முடிவுகளை கண்டறிவதும் நாங்கள் தான். உயிரை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்யும் எங்களுக்கு ஓய்வு வழங்க மறுக்கின்றனர். இதனால் எங்கள் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர், என்று கூறினர்.