

ஊரடங்கால் தனது வாடிக்கையாளர்களுக்கு செல்ஃபோன் ரீச்சார்ஜ் வேலிடிட்டியை மே.5 வரை நீட்டித்து பிஎஸ்என்எல் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காலத்தில் பிஎஸ்என்எல் மொபைல் சந்தாதாரர்கள் ஏற்கெனவே வேலிடிட்டி முடிவு பெற்று அக்கவுண்டில் பேலன்சும் இல்லாமல் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அத்தகைய அனைத்து சந்தாதாரர்களின் வேலிடிட்டியை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் மே -5 வரை இலவசமாக நீட்டித்துள்ளது.
இதனால் அத்தகைய சந்தாதாரர்கள் இன்கம்மிங் அழைப்புகளை இலவசமாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது .
மேலும் சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்காக டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் மை பிஎஸ்என்எல் ஆப் என்ற செயலி மூலம் அல்லது portal.bsnl.in என்ற இணையதளம் அல்லது பேடிஎம் அல்லது கூகுள் பே போன்றவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
அமேசான் பே மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு உடனடியாக ரூ 50 கேஷ் பேக் வழங்கப்படுகிறது என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.