

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) தலைவர் நேரு பிரகாஷ் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் உள்ளன.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தற்போதும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தாலும் மின் இணைப்புக்கு மாதம் சுமார் ரூ.2 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார் அவர்.