

ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைக் கூலித்தொழிலாளர்களும், அன்றாடப் பணி செய்து வாழ்க்கையை நகர்த்துபவர்களும் வறுமையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இப்படியான மனிதர்களுக்குத் தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தனது உடல் உழைப்பையே சேவையாகக் கொடுத்து கவனிக்க வைக்கிறார் சதீஷ்குமார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் டூவீலர்களுக்குப் பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருக்கிறார் சதீஷ்குமார். ஊரடங்கு நேரத்தில் அரசு அனுமதித்த மதிய நேரம் வரையிலும் அழைப்பின் பேரில் வீடுகளுக்கே போய் பஞ்சர் ஒட்டும் சதீஷ்குமார், பொருளாதார அளவில் ஏழைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழலை உள்வாங்கி இதை இலவச சேவையாகச் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ் திசை'யிடம் பேசும்போது, “சுற்றுவட்டாரப் பகுதியில் 4 கிலோ மீட்டர் வரை போய் பஞ்சர் ஒட்டி வருகிறேன். வழக்கமாக நேரில் போய் ஒட்ட ஒரு பஞ்சருக்கு 100 ரூபாய் கட்டணம். ஆனால், இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ந்திருக்கிறது. ஊரடங்கால் மதியம் ஒருமணி வரை மட்டுமே மக்கள் வெளியே செல்ல முடியும். இதனால் அத்தியாவசியப் பணிகளுக்காகத்தான் வாகனத்தையே வெளியில் எடுப்பார்கள்.
இந்த நேரத்தில் தொடர்ச்சியான ஊரடங்கால் வேலை இழந்து பொருளாதார ரீதியிலும் நலிவுற்று இருப்பார்கள். இதனால் அவர்களிடம் அத்திவாசியப் பொருள்களை வாங்கவே கையில் பணம் இருக்காது. பலரும் கடன் வாங்கித்தான் காய்கனியும், மளிகைப் பொருள்களும் வாங்குகிறார்கள்.
இப்படியான சூழலில் பஞ்சர் ஒட்டப் பணம் இருக்குமா? அதனால்தான் இந்தச் சேவையை இலவசமாக்கினேன். 4 கிலோ மீட்டர் சுற்றளவில் செல்வதால் கொஞ்சம் பொருளாதார வசதி இருப்பவர்கள், பஞ்சர் ஒட்டியதற்கான காசைக் கொடுக்கிறார்கள். நடுத்தர நிலையில் இருப்பவர்கள், ‘பெட்ரோல் போட்டு வந்தீங்களா அண்ணே?’ன்னு கேட்டுட்டு 50 ரூபாய் கொடுக்கிறார்கள். அதற்கும் கீழே இருப்பவர்களிடம் நானே காசு வாங்குவதில்லை. மற்றவர்களைப் போல் பணமோ, பொருளோ கொடுக்க முடியாவிட்டாலும் உடல் உழைப்பால் உதவிய திருப்தி இருக்கிறது. ஏதோ என்னால் முடிந்த ஒரு சேவை” என்றார் சதீஷ்குமார்.