

நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி ,கூடுதாழை, கூத்தன்குழி, கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை .
மீன்களை வாங்க அதிகளவில் வெளியூர் வியாபாரிகள் வருவதினால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாகவும் சமுதாய இடைவெளியைப் பின்பற்றி மீன்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்படுவதால் மீனவ கிராம மக்கள் அந்தந்த கிராமங்களில் ஒன்று கூடி மீன்பிடிக்க தடை விதித்துள்ளனர்.
எனவே மீன்வளத் துறையினர் கேரள மாநிலத்தில் செயல்படுவது போல மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவோ அல்லது மீன்வளத்துறை மூலமாக நேரடியாக மீன்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் .
பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் சில நிபந்தனைகளுடன் கடலில் மீன்பிடிக்கச் செல்லலாம் என தமிழக அரசு கடந்த வாரம் ஆணை பிறப்பித்தது.
இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சில மீனவ கிராம மக்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
என்றாலும் இந்த மீன்களை வாங்குவதற்காகவே வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் மீனவ கிராமங்களில் வருகின்றனர். இதனால் தங்களது ஊர்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அவர்கள் மூலமாக பரவி விடுமோ என்ற அச்சம் காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வேண்டாம் என அந்தந்த மீனவ கிராமங்களில் முடிவெடுக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.