

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக வெங்கா யத்தின் விலை குறைந்துவிட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வெங்காயம் விற்பனை சந்தைகளில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள திருச்சிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயமும், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயமும் தினமும் 200 டன் அளவுக்கு விற்பனைக்கு வருகிறது.
ஊரடங்கு காரணமாக அத்தியா வசியப் பொருட்களுக்கான வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.20 முதல் ரூ.60 வரை விற்ற பெரிய வெங்காயம் தற் போது கிலோ ரூ.5 முதல் ரூ.30 வரையே விற்கிறது. இதனால் வெங்காய வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
30% வெங்காயம் வீணாகிறது
இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜூ, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
தமிழகத்தில் திருச்சி, திண்டுக் கல், மதுரை, சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்க ளில்தான் பெரிய அளவிலான மொத்த வெங்காய விற்பனை சந்தைகள் உள்ளன. இவைதவிர ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், திருவண் ணாமலை, கும்பகோணம் ஆகிய இடங்களுக்கும் சேர்த்து நாளொன் றுக்கு வழக்கமாக ஏறத்தாழ 1,250 டன் பெரிய வெங்காயம் வெளி மாநிலங் களிலிருந்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 750 டன் அளவுக்கு வருகிறது. ஆனால், இதில் பாதிக்கு மேல் விற்பனையாகாமல் தேங்கி விடுகிறது. திருச்சியில் மட்டும் 500 டன் வெங்காயம் தேங்கியுள்ளது.ஊரடங்கு உத்தரவால் திருச்சியில் காய்கறி சந்தைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் உள்ளிட்ட இடங்களிலிருந்து லாரியில் 4 நாட்கள் பயணித்து வரும் வெங்காயத்தை உடனடியாக இறக்கி உலர்த்த முடியவில்லை. இதனால், ஏறத்தாழ 30 சதவீதம் வெங்காயம் வீணாகிறது.
வீணாவதற்கு முன் விற்றுவிட வேண்டும் என்று, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டையை தரத்துக்கேற்ப ரூ.250 முதல் ரூ.750 வரை குறைத்து விற்கிறோம் என்றார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை சில்லறையில் விற்பனையாகிறது. இதனால், வெங்காயத்தை பட்டறை போட்டு வைத்திருந்த விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன வெங்காய சாகுபடி செய்துள்ள கொப்பம்பட்டி ராஜேந்திரன் கூறியது:
கிலோ ரூ.120-க்கு விதை வாங்கி வெங்காயம் சாகுபடி செய்தேன். தற்போது மொத்த விலையில் கிலோ ரூ.40-க்கு விற்கிறது.
விதை முதல் அனைத்து செலவுக்கும் கடன் வாங்கித்தான் சாகுபடி செய்தேன். உரிய விலை இல்லாததால் சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்துக்குள்ளாகின் றனர் என்றார்.