

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் உள்பட மூவர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 53 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் நான்கு நபர்கள் ஏற்கெனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து இன்று (ஏப்.23) கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவரும், தஞ்சாவூர் நெய்வாசல் சேர்ந்த ஒருவரும், ஒரத்தநாடு ஊரணிபுரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர் மண்டல கரோனா தடுப்பு குழு காவல்துறை தலைவர் சாரங்கன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் குணம் அடைந்தவர்களுக்குப் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
குணமடைந்து வீடு செல்லும் மூன்று நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.