

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் 500 ரூபாய் மதிப்பிலான 19 மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய வேண்டும் என கோரிய வழக்கில் அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்த்தி விற்கப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் வாங்க வசதியாக 500 ரூபாய் மதிப்பில் 19 வகையான வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் இந்த மளிகைப்பொருட்களை வழங்கவேண்டும் என்றும், ரேசன் கடைகளின் மூலம் விநியோகம் செய்தால் மக்கள் கூட்டம் அதிகமாகும் என்பதாலும், சமூக இடைவெளி பின்பற்றமுடியாது என்பதாலும், வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பினருமே ரேசன் கடைகளுக்கு சென்று 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
ரேசன் கார்டோ, மற்ற எந்த ஒரு அடையாள விவரங்களோ கேட்கப்படமாட்டாது என்று. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும்போது சமூக விலகல் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.