

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெப்ப நிலை இயல்பைவிட அதிகரிப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், சிறுவர்கள் வெளியில் வருவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்:
“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
உள் மாவட்டங்களான திருச்சி, கரூர்,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 39° முதல் 40° வரையும் பதிவாகக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு விவசாய வேலை செய்வோர் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11:30 முதல் பிற்பகல் 3:30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
கடந்த 24மணி நேரத்தை பொருத்த வரையில் கன்னியாகுமரி மாவட்டம் சுரளக்கோடு, பேச்சிப்பாறை, லோவர் கோதையார் பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் காலை வேலையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும்,மாலை நேரங்களில் தெளிவானதாகவும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஷாகவும்,குறைந்தபட்ச வெப்பநிலை 27டிகிரி செல்சியஷாகவும் காணப்படும்” என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.