Published : 23 Apr 2020 05:32 PM
Last Updated : 23 Apr 2020 05:32 PM

ஓசூர் பேகேப்பள்ளியில் கரோனா தொற்று இல்லை: தடை விலக்கப்பட்டதாக அறிவிப்பு

தமிழக எல்லை நகரமான ஓசூர் வட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள மக்களிடம் கரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் காணப்படாததால் கிராமத்துக்கு போடப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் - 1 பகுதியில் ஜுஜுவாடி அருகே அமைந்துள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் கடந்த 18-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்குள் யாரும் வந்து செல்லாத வகையில் கிராமத்தின் 6 பிரதான சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து தீவிரக் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வருவாய்த்துறை மூலமாக குழுக்கள் அமைத்து வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டன.

மேலும் கிராமத்தில் தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிப்பு மற்றும் மருத்துவ குழுவினர் மூலமாக வீடு வீடாகச் சென்று காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடல் பரிசோதனை மற்றும் ரத்த மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கடந்த 20-ம் தேதியன்று இந்த கிராமத்தில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்களான டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் எம்.என்.மஞ்சுநாதா ஆகியோர் வருகை தந்து பேகேப்பள்ளி கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் பேகேப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களிடையே ஒருவருக்கும் கரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாத காரணத்தினால் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு கிராம சாலைகளில் ஊருக்குள் யாரும் வந்து செல்லாத வகையில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறியதாவது, ’’பேகேப்பள்ளி கிராமத்தில் சேகரிக்கப்பட்ட 35 ரத்த மாதிரிகளில் கரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இல்லாத காரணத்தினால் கிராமத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் அரசுக் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x