Last Updated : 23 Apr, 2020 04:29 PM

 

Published : 23 Apr 2020 04:29 PM
Last Updated : 23 Apr 2020 04:29 PM

ஊரடங்கின்போது வாகன முறைகேடுகளைத் தடுக்க புதிய மொபைல் செயலி: மதுரை காவல்துறை அறிமுகம்

ஊரடங்கின்போது வாகன முறைகேடுகளைத் தடுக்க புதிய மொபைல் செயலியை மதுரை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மதுரையில் அத்தியாவசியப் பொருட்களை அன்றாடம் கொண்டு செல்ல வாகனங்களை முறைப்படுத்த ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

நகரில் பயன்பாட்டிலுள்ள வாகனங்களை முறைப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் விக்ரம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் குழுமத்தின், துர்யோசிஸ் தனியார் மென்பொருள் நிறுவனம் பிரத்யேக செயலி ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த மொபைல் செயலியை காவல் ஆணையர், காவல் துணை ஆணையர் கார்த்திக் இன்று அறிமுகப்படுத்தினர். கோரிப்பாளையம் தேவர்சிலை அருகே இச்செயலி மூலம் தல்லாகுளம் உதவி ஆணையர் காட்வின், ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கை செய்தனர்.

இது பற்றி காவல் ஆணையர் கூறியது: அத்தியவாசிய தேவைக்கென மதுரை ஆட்சியர் அலுவலகத்தால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தவிர, அனுமதியின்றி செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தப்படும். தனிநபர்கள் தங்களது அவசிய தேவைகளுக்காக வெளிவரும்போது, அது குறித்தும் இச்செயலி மூலம் குறிப்பு எடுக்கலாம்.

அதே நபர்கள் தங்களது காவல் நிலைய எல்லை வரம்பைத் தாண்டி ஒவ்வொரு முறையும் செல்லும்போதும், இச்செயலி மூலம் துல்லியமாக அறிந்து சட்டத்தை மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இச்செயலியால் எந்த வாகனம், எந்த இடத்தில் சோதனை செய்யப்பட்டது. எத்தனை முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவரும்.

ஆட்சியர் அலுவலகம் வழங்கிய க்யூஆர் ஸ்கேன் கோடு (QR Scan Code) அனுமதிச் சீட்டுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதை மீறுவோர் மீது 179 மோட்டார் வாகனச்சட்டப்படி ரூ.500 அபராதமும், தொடர்ந்து மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகம் மூலம் முறையான அனுமதி பெற்று வாகனங்களை இயக்க வேண்டும், காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x