

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகாதார ஆய்வாளர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பணியாற்றி வருகிறார்.
தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக ராஜபாளையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அண்மையில் ராஜபாளையத்தில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது அவர்களது சளி மாதிரிகளை ஆய்வு மையத்துக்கு இந்த குறிப்பிட்ட சுகாதார ஆய்வாளர் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சுகாதார ஆய்வாளருக்கு உடலில் அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்து கொண்டபோது இவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதேபோன்று விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூரில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவருக்கும் 29 வயது பெண் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.