

வெயில் காலங்களில் சமூக அமைப்புகள் நீர் மோர் பந்தல்கள் அமைப்பது போல தற்போது கைகழுவும் இடங்களை அமைக்க முன் வர வேண்டும் என்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கரோனா சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் குறுந்தகவல் மூலமும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது:
''அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நலமாக, பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கரோனா நோய் கண்காணிக்கும் பணிக்காக வந்துள்ளேன். அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய நேரம் இது. இந்த நோயினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்களுக்கென அரசு பல நல்ல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதே சமயம் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள நண்பர்கள் தங்கள் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு அல்லது மருந்துப் பொருள் தேவை இருப்பின் எனக்கு அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்; விரும்புகிறேன்.
எனவே, உங்கள் இந்த 3 மாவட்டங்களில் உங்கள் கண்ணில் படும் மிகவும் ஏழ்மையான மக்கள் அல்லது உணவு தேவை என கேள்விப்படும் பகுதி குறித்து தகவல் அளித்தால் அதற்கான தீர்வு காண முயல்வேன். மேலும், நோய்ப் பரவலைத் தடுக்க நாளை முதல் இந்த 3 மாவட்டங்களிலும் நகர்ப் பகுதிகளில் பொது இடங்களில் கைகழுவும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் இது அதிகமான இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.
சமூக சேவை அமைப்புகளில் உள்ள நண்பர்கள் வெயில் காலங்களில் நீர்ப் பந்தல் அமைப்பது போல கரோனா காலத்தில் பொது இடங்களில் கைகழுவும் வசதியை தங்கள் பகுதிகளில் மக்கள் அதிகம் வந்துபோகும் இடங்களில் அமைக்கலாம். நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்க இது பெரிதும் உதவும். இதை அமைக்கக் குழாயுடன் கூடிய ஒரு சின்டெக்ஸ் நீர்த் தொட்டி, லிக்விட் சோப் இவை போதும். விழிப்போடு ஒன்றுபட்டு கரோனாவை வெல்வோம்.''
இவ்வாறு தெரிவித்துள்ளார் சண்முகம்.