Published : 23 Apr 2020 03:05 PM
Last Updated : 23 Apr 2020 03:05 PM

மதுரையில் தூய்மைப் பணியாளர்களை மாலை அணிவித்து கவுரவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ: 24 வகை மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கினார்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக 24 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

823 பணியாளர்களுக்கு இந்த மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், உப்பு 1 கிலோ, சோம்பு 50 கிராம், சீரகம் 50 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லி தூள் 100 கிராம், சாம்பார் பொடி 50 கிராம், பெருங்காயம் 20 கிராம், சுக்கு காபி 1 பாக்கெட், மிளகாய் வத்தல் 50 கிராம், பட்டை 20 கிராம், சன்பிளவர் ஆயில் 500 மி.லிட்டர், பாத்திரம் துலக்கும் சோப்பு 1, சலவை சோப்பு 1, குளியல் சோப்பு 1, டீதூள் பவுடர் 1 பாக்கெட் என 24 வகையான ரூ.670 மதிப்பிலான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து சமூக பரவல் இல்லாமல் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கில் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தங்குதடையின்றி அவரவர் வீட்டிலேயே கிடைப்பதற்கும், விலைவாசி ஏற்றம் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணவனால் கைவிடபட்டோர், தினக்கூலிகள், ஏழை எளியோர், முதியோர் ஆகியோருக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.

கரோனாவை ஒழிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அற்புதமானது. போற்றுதல்குரியது. அவர்களைப் பாதுகாப்பது, தாங்கிப்பிடிப்பது அரசின் பொறுப்பு.

மேலும் மாநகராட்சியில் பணியாற்றும் சுமார் 5000 பணியாளர்களுக்கும் இந்த 24 வகையான மளிகைப்பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x