

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரேனோ சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்ற 22 பேர் குணமடைந்து இன்று ஒரே நாளில் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை நிலவரப்படி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 62 பேருக்கு கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22-ம் தேதி வரை இங்கு சிகிச்சை பெற்று குணடைந்த 35 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து மேலும் 22 பேர் இன்று குணடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் முழுக்க 5046 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 3464 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் மேலப்பாளையம், பேட்டை, கோடீஸ்வரன்நகர், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம், பத்தமடை உள்ளிட்ட 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.