சென்னை மாநகரில் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்க முடிவு; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே என தமிழக அரசு விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை மாநகரில் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் சூரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினைத் தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.

தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும், மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்குத் தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள 'ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டம் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டு பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தைப் பேணவும் இன்று 'ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும் உடல் நலம் பேணுவதற்கும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகரில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும். இந்த விநியோகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் பயனாளிகளும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழிமுறைகள், கரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in