

கடலூரில் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாக வந்தபோது தேர்தல் நடத்தை விதி மீறல் நடந்துள்ளதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக திமுக அலுவலக கட்டிட பிரச்சினையை அதிமுக எழுப்பியுள்ளது.
கடலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் கடலூர் வந்து சென்றார். அவர் வருகையை ஒட்டி, கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. மேலும் மஞ்சை நகர் மைதானத்தில் சாலைகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் திங்கள்கிழமை முன்னாள் திமுக எம்எல்ஏ இள.புகழேந்தி, கடலூர் உதவித் தேர்தல் அலுவலர் எம்.ஷர்மிளாவிடம், அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைத்ததிலும் மஞ்சை நகர் மைதானத்தில் சாலை அமைத்ததிலும் அதற்காக பெண்ணையாற்றிலிருந்து மணல் எடுத்து வரப்பட்டதும் தேர்தல் விதிமீறல். மேலும் ஆட்சியர் அலுவல வளாகத்திலிருந்து 100 மீ தூரத்துக்கு அரசியல் கட்சிக் கொடிகளோ, தோரணங்களோ, ப்ளக்ஸ் பேனர்களோ வைக்கக் கூடாது. ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக கொடிகள் , வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன” என்றார் புகழேந்தி.
தேர்தல் அதிகாரி ஷர்மிளாவிடம் கேட்டபோது, புகார் மனு மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் செவ்வாய்க்கிழமை மஞ்சை நகர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாலையை ஆய்வு செய்தார்.
இதனிடையே திமுகவினருக்கு பதிலடிகொடுக்கும் வகையில், அதிமுகவினரும் தங்கள் பங்குக்கு, லார்ன்ஸ் சாலையில் உள்ள திமுக அலுவலகம் வழி புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி பழைய பிரச்சினையை தூசு தட்டத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக நகராட்சித் தலைவர் சி.கே.சுப்ரமணியம் கூறுகையில், “திமுக அலுவலகம் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். சட்டத்துக்கு புறம்பாக கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதை அகற்றுவோம்” என்றார்.
நகராட்சியின் முன்னாள் தலைவரும், தற்போது மாவட்டத் திமுக தலைவருமான து.தங்கராசு, “கட்டிடம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டது” என்றார்.
இதனிடையே முதல்வர் வருகையை ஒட்டி, கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் கட்சிக் கொடி கட்டியதற்காக கடலூர் நகர அதிமுக செயலர் குமரன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.