Last Updated : 23 Apr, 2020 02:28 PM

 

Published : 23 Apr 2020 02:28 PM
Last Updated : 23 Apr 2020 02:28 PM

மன தைரியத்துடன் எதிர்கொண்டால் கரோனாவில் இருந்து எளிதில் மீளலாம்: குணமடைந்தோரின் அனுபவப் பகிர்வு

தூத்துக்குடி

மன தைரியத்துடன் எதிர்கொண்டால் கரோனா தொற்றில் இருந்து எளிதில் மீளலாம் என தூத்துக்குடியில் குணமடைந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் கரோனா பாதித்தவர்களை சகஜமாக நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த 5 பேர், பேட்மாநகரத்தை சேர்ந்த 2 பேர், ஆத்தூர் மற்றும் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த தலா ஒருவர் என 9 பேர் சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினர். அவர்களில் 5 பேர் பெண்கள், இருவர் ஆண்கள், 2 குழந்தைகளும் அடங்குவர்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டது குறித்து குணமடைந்தவர்கள் கூறியதாவது: கரோனா தொற்று என்பது பெரிய விஷயம் அல்ல. கரோனா பாதித்தவர்களை மற்ற மனிதர்கள் சகஜமாக நடத்த வேண்டும். அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம்.

மன தைரியத்துடன் எதிர்கொண்டால் கரோனா தொற்றில் இருந்து எளிதில் மீளலாம்.

மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தோம். மருத்துவர்களின் தரமான சிகிச்சை மற்றும் கனிவான உபசரிப்பு மூலமாக தான் விரைவில் நாங்கள் நலம் பெற முடிந்தது என்றனர் அவர்கள்.

ராட்சத இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி:

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினசரி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சுய சுத்தத்தை கடைபிடிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராட்சத எந்திரம் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று தொடங்கியது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பொறுப்பு கழகம் உதவியின் பேரில் கொண்டுவரப்பட்ட ராட்சத இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்தனர்.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த ராட்சத இயந்திரம் நகரின் முக்கிய சாலைகளில் கிரிமி நாசினி தெளித்தப்படி சென்றது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x