

மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் இன்னும் ஓரிரு நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் இன்று முதல் மே 3-ம் தேதி ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை தினமும் 3 வேளை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2364 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மீதம் உள்ள 26 பேரில் 19 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 5 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், 2 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று இல்லாத நிலை நிலவி வருகிறது. அரசின் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் இன்னும் ஓரிரு நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளை தமிழக முதல்வர் தொடர்ந்து செய்து வருகிறார், என்றார் அவர்.