Published : 23 Apr 2020 01:34 PM
Last Updated : 23 Apr 2020 01:34 PM

நாஞ்சில் நாட்டில் காலம் காலமாய்ப் பேசப்படும் கரோனா: சுவாரஸ்யத் தகவல்

ஆச்சியம்மை

கண்ணுக்குத் தெரியாத கரோனா உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து நாடுகளும் அச்சத்துடன் உச்சரிக்கும் சொல்லாகவும் ‘கரோனா’ உருவெடுத்துள்ளது. ஆனால், குமரி மாவட்டத்தில் காலம் காலமாக மக்களின் பேச்சுமொழியில் குறிப்பாக சாபம் இடும் தொனியில், ‘கரோனா தீனம் (நோய்) பிடிக்க’ என்னும் வார்த்தை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கும் தகவல் ஆச்சரியமளிக்கிறது.

பறக்கை கிராமத்திலுள்ள எங்கள் தெருவைச் சேர்ந்த ஆச்சியம்மை பாட்டி, என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். “கடைசியில் நிஜமாவே அந்த கரோனா தீனம் வந்துடுச்சே” என்ற ஆதங்கம் அவரது பேச்சின் ஊடே வெளிப்பட்டது. பதிலுக்கு எனது அம்மாவும், “ஆமா... சின்ன வயசுல கரோனா தீனம் பிடிக்கன்னு திட்டக்கூட செய்வாங்க” என அதை ஆமோதிக்க, பேச்சு நீண்டது.

இதையெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்ததால் ஆச்சியம்மை பாட்டியிடம், “அதுபற்றிச் சொல்லுங்களேன்” என்றேன். “மக்கா... அடிக்கடி கிராமப்பகுதிகளில் இந்த வார்த்தையை சொல்லுவாங்க. குறிப்பிட்டு, ‘கையில் கரோனா தீனம் பிடிக்க’ன்னு சொல்லிக் கேட்டுருக்கேன். ஆனா, இப்பல்லாம் அப்படியான வார்த்தையைக் கேட்க முடியல. இந்த தலைமுறை படிச்ச பிள்ளைங்களுக்கு இந்த வார்த்தையே தெரியல. எனக்குத் தெரிஞ்ச அளவில், எடையில் ஏமாற்றம் நடக்கும்போதுதான் இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவாங்க. அப்ப விளையாட்டா சொன்ன வார்த்தை இப்படி விஸ்வரூபம் எடுத்து வந்துருக்கே” என்றார் ஆச்சியம்மை பாட்டி.

இதுகுறித்து குமரி மாவட்ட முன்னோடி விவசாயி செண்பகசேகரன் கொஞ்சம் விரிவாகவே பேசினார். “அளவீடு செய்வதில்தான் இந்த வார்த்தை அதிகம் பிரயோகிக்கப்பட்டது. குறிப்பாக, விவசாயிகளிடம் இந்த வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருந்தது. இல்லத்தரசிகளும்கூட சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு பசுமாடுகள் இருந்தன. அப்படி பசு இல்லாத வீட்டுக்காரர்கள் வீட்டு வாசலில் பால்காரர் கொண்டு வரும் பாலை வாங்குவார்கள். பால்காரர் அளந்து ஊத்தும் அளவுக் கருவிக்குள் ஒரு கட்டை விரலையும் போட்டிருப்பார். பெண்கள் இதைக் கவனித்துவிட்டால் ‘உன் கையில கரோனா தீனம் பிடிக்க’ன்னு சொல்லுவாங்க.

அதேமாதிரி, வேலையாட்களுக்கு முன்பெல்லாம் நெல்லைத்தான் கூலியாகக் கொடுப்பார்கள். அப்போது நெல்லை அளந்து கொடுக்கும்போது அளவீடை குறைவாகக் கொடுக்கும்போதும் ‘கையில கரோனா தீனம் பிடிக்க’ன்னு சொல்லுவாங்க. உழைத்தவனுக்கு உரிய ஊதியத்தை கொடுக்காதபோதும் இதைச்சொல்லும் வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்தது.

கரோனா தீனம் என்பதை கொடுமையின் குறியீடாகவே பயன்படுத்திவந்தனர். இதுக்கும் இப்ப வந்திருக்கிற கரோனா தொற்றுக்கும் சம்பந்தம் இருக்கான்னு எனக்கு தெரியாது. ஆனா, உலகமே கரோனா என்ற சொல்லை உச்சரிப்பது நினைவிடுக்குகளில் நாஞ்சில் நாட்டின் வட்டாரச் சொல்லாடலை நினைவூட்டுகிறது” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x