

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை இன்று காலை சட்டப்பேரவையில் தொடங்கியது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கினார்.
மக்களிடம் குறைகளை தீர்க்க செல்வதாலும் அரிசி மற்றும் காய்கறி வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபடுவதாலும் புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மருத்துவ பரிசோதனை இன்று (ஏப்.23) செய்வதாக அறிவிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த பரிசோதனை நடத்தப்படும். விரும்புபவர்கள் இந்த பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆர்டி- பிசிஆர் ( RT-PCR) முறையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்களில் காங்கிரஸில் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அதிமுகவில் அன்பழகன், பாஸ்கர், பாஜகவில் சாமிநாதன், சங்கர் ஆகியோர் பரிசோதனை செய்திருந்தனர்.
பரிசோதனைக்கு வந்த அரியாங்குப்பம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி பரிசோதனை செய்த மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கி சேவையை பாராட்டினார்.
புதுச்சேரியில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள், இரு எம்பிக்கள் உள்ளனர். ஆனால், முதல்வரை தவிர்த்து இதர அமைச்சர்கள் சோதனை எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தொடங்கி என்.ஆர்.காங்கிராஸாரும், ஆதரவுக்கட்சியான திமுக எம்எல்ஏக்களும் யாரும் பகல் 12 மணி வரை வரவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் வரவில்லை.பெரும்பாலானோர் வருகைக்காக மருத்துவர்கள் காத்திருந்தனர்.
சோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.