

தமிழக தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு அறிவித்துள்ளபடி தமிழகத்தில் படிப்படியாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமுதாய விலகலை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகலள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
அத்தியாவசிய தேவைகளுக்கான தயாரிப்புகள், போக்குவரத்து, விற்பனை தவிர வேறு எதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய முறையில் அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனாலும் 19 பேர் கொண்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி 20-ம் தேதிக்கு பின்னர் தளர்வு இல்லை ஊரடங்கு நீடிக்கும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இன்று முதல்வர் தொழிலதிபர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் இன்று (23.4.2020) காலை 11.00 மணிக்கு தொழிலதிபர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளார்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. அதன் பரவலைத் தடுக்க இந்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றியமையா உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றைத் தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், முதல்வர் இன்று (23.4.2020) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.