புதுச்சேரிக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு; விநியோக தாமதத்தால் ஏழை மக்கள் கடும் அவதி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

மத்திய அரசு புதுச்சேரிக்கு அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்து தந்தும் விநியோகத்தில் தாமதத்தால் உரிய நேரத்தில் கிடைக்காமல் ஏழைகள் கடும் அவதியில் உள்ளனர். ரேஷன் கடைகள் செயல்படுவது அவசியம் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பித்து ஏழை மக்கள் பசியால் வாடக்கூடாது என்று மத்திய அரசு அரிசி, பருப்பை மாநிலங்களுக்கு ஒதுக்கீட்டை செய்துள்ளது. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் சிவப்பு அட்டையுள்ள ஏழை குடும்பத்தினருக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் தர புதுச்சேரிக்கு 9,425 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பருப்பு தற்போது 190 டன் வந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது.

அரிசி, பருப்பை புதுச்சேரிம் பிராந்தியங்களை ஒட்டியுள்ள தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்கள் வழங்கி விட்டன. தற்போது தமிழகத்தில் மளிகை பொருட்கள் ரேஷனில் தரத்தொடங்கியுள்ளனர். ஆனால், புதுச்சேரியில் ரேஷன் இல்லாததால் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் சில ஆண்டுகளாக மூடியே உள்ளன. ரேஷன் ஊழியர்கள் 800 பேருக்கு ஊதியமும் 30 மாதங்களாக தரப்படவில்லை. தற்போது இக்கட்டான சூழலில் சிறிய மாநிலமான புதுச்சேரியில் பணியாற்ற ரேஷன் ஊழியர்கள் முன்வந்தனர்.

ஆனால், ரேஷன் ஊழியர்களை புறக்கணித்து பொதுப்பணித்துறை பல்நோக்கு ஊழியர்களை கொண்டு வீடு, வீடாக அரிசி தரும் பணியை கடந்த 12-ம் தேதி புதுச்சேரி அரசிலுள்ள அதிகாரிகள் தொடங்கினர். 12 நாட்களை கடந்த பின்னரும் கிராமத்தொகுதிகளில் கூட இவர்களால் முழுமையாக அரிசி தந்து முடிக்கவில்லை. பருப்பும் இன்னும் தரப்படவில்லை என்று மக்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.

கிராம பகுதிகளை தாண்டி நகரப்பகுதிகளிலுள்ள இதர தொகுதிகளில் இன்னும் அரிசி அனைத்துப் பகுதிகளிலும் தரவில்லை. முன்பிருந்ததுபோல் ரேஷன் கடைகள் இருந்தால் எளிதாக அரிசி விநியோகம் ஒரே நேரத்தில் நடந்திருக்கும். தற்போது மீண்டும் ரேஷன் கடைகள் தேவை என்ற கோரிக்கை வலுவாகிறது.

நகரப் பகுதி எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரியில் அரிசி விநியோகத்தில் கடும் குளறுபடி உள்ளது. மொத்தமாக 2,500 மெ.டன்னுக்குள்தான் அரிசி விநியோகம் 12 நாட்களில் நடந்துள்ளது. ஆளுநர்- அமைச்சரவை மோதலை தாண்டி அதி்காரிகள் தனியாக செயல்படுகின்றனர். பெரும் குழப்பம் நிலவுகிறது.

ஊரடங்கு நேரத்தில் அரிசியை சரியாக சேர்க்க வேண்டிய அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. ரேஷனில் தந்திருந்தால் ஓரிரு நாளில் முடிந்திருக்கும். தற்போது 12 நாட்களை கடந்தும் அரிசி ஒரே நேரத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தந்து முடிக்கவில்லை".என்கின்றனர்.

தற்போது நகரப்பகுதிகளில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் அரிசி விநியோகத்தை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலர் ஆலிஸ்வாஸ், துறை இயக்குநர் வல்லவன் ஆகியோர் கூறுகையில், "அரிசி தரும் பணியை கடந்த 12-ல் தொடங்கினோம். புதுச்சேரியில் பத்து தொகுதிகளில் கிராமங்களில் அரிசி தர தொடங்கினோம். அது நடந்து வருகிறது. தற்போது கூடுதலாக 5 தொகுதிகளில் தர தொடங்கியுள்ளோம்.

இப்பணியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களை பயன்படுத்தி வருகிறோம். வாகனங்களில் அரிசி ஏற்றி வீடு வீடாக தருகிறோம்.ஏப்ரலுக்குள் புதுச்சேரியில் அரிசி தந்து விடுவோம். காரைக்காலில் இரு நாட்களில் அரிசி தரும் பணி நிறைவடையும்.

விநியோகத்தை அதிகரிக்கக் கூடுதலாக ஊழியர்களை பயன்படுத்துவோம். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் அரிசி தந்து விட்டோம். தற்போது அரிசி மட்டும்தான் தருகிறோம். ஏனெனில் பருப்பு 190 டன் மட்டுமே வந்துள்ளது. 3 மாதத்துக்கு சேர்த்து 540 டன் தேவை. விரைவில் பருப்பு வந்தவுடன் பருப்புவிநியோகம் தொடங்கும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in