

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவுக்கு முரணாக கூட்டுறவு சங்க செயலர்களை இடமாறுதல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து சங்க செயலர்கள் மே 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்நிலையில் ஆவணங்களை சரிவர பராமரிக்காத சங்கங்கள், கணினிமயமாகாத சங்கங்கள், வங்கியில் பணத்தை செலுத்தாமல் அதிக கையிருப்புத் தொகை வைத்துள்ள சங்கங்கள், நீதிமன்ற வழக்குகள் உள்ள சங்கங்களின் செயலர்களை இடமாற்றம் செய்ய பிப்.22-ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவவிட்டார்.
அதன்படி தமிழக முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் பதிவாளரின் உத்தரவை மீறி முனைவென்றி, கோட்டையூர், சாலைக்கிராமம், எம்.சூரக்குடி, கிருங்காக்கோட்டை, கண்டவராயன்பட்டி, கொல்லங்குடி, புலியடிதம்பம் ஆகிய 8 சங்க செயலர்களை இடமாற்றம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து 8 சங்க செயலர்களின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மே 6-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்,’ என்று கூறினார்.