

தூத்துக்குடி மாநகர பகுதியில் கரோனா வைரசின் சங்கிலி தொடர் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 9 நாட்களாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தால் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள போல்டன்புரம், ராமசாமிபுரத்தில் மொத்தம் 11 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி போல்டன்புரம் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. அந்த பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன. அதே போன்று நடமாடும் ஏ.டி.எம். வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
இதனால் கரோனா வைரசின் சங்கிலி தொடர் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த 9 நாட்களாக தூத்துக்குடி மாநகர பகுதியில் புதிதாக எந்தவித கரோனா தொற்றும் ஏற்படவில்லை.
அதே போன்று ஒருவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து மாநகர நல அலுவலர் அருண்குமார் கூறுகையில், "போல்டன்புரம் பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அனைத்தும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. என்றார்.