நெல்லையில் ஆதரவற்றோர் தங்கும் முகாமில் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் திரையிடல்

நெல்லையில் ஆதரவற்றோர் தங்கும் முகாமில் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் திரையிடல்
Updated on
1 min read

நெல்லையில் ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் மன அழுத்தத்தைப் போக்க எம்ஜிஆர் திரைப்படம் திரையிடப்பட்டது.

கரோனா ஊரடங்கு, சாலைகளில் திரிந்த ஆதரவற்றோருக்கு தலைக்கு மேல் கூரையையும் மூன்று வேளைக்கும் உணவையும் சுத்தமான தண்ணீரையும் உறுதி செய்துள்ளது. ஆம், மாநிலம் முழுவதுமே அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆதரவற்றோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனர்.

சாலையில் திரிபவர்கள் தொற்றுக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காகவும் அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு மீட்கப்பட்டவர்களுக்கு உணவும் இடமும் மட்டும் போதாது நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு ஆசுவாசப்படுத்த பொழுதுபோக்கு அம்சமும் வேண்டும் என்பதால், நெல்லையில் ஒரு முகாமில் திறந்த வெளியில் சினிமா திரையிடப்பட்டது.

நெல்லை மாவட்டம் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 107 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாத காலமாக அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி முகாமில் உள்ளவர்களின் மன அழுத்தம் போக்க நேற்று இரவு திறந்த வழி திரையரங்கு ஏற்பாடு செய்து எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு திரைப்படத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தை காணும் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முகாமில் இருந்தவர்கள் திரைப்படம் பார்ப்பது தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாகக் கூறினார்கள். தமிழகத்திலேயே முதன்முறையாக நெல்லை மாநகராட்சி முகாமில் திரைப்படம் திரையிடலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அன்றாடம் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in