

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்குக்கு மத்தியில் தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
கரோனா அச்சத்தின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வங்கியில் உள்ள ரத்தத்தின் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், ரத்த வங்கி பதிவேட்டில் உள்ள ரத்ததானம் அளிப்பவரின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ரத்தம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் போலீஸாரின் கெடுபிடியால் அவர்களால் ரத்தம் கொடுக்க மருத்துவமனைக்கு வர முடியவில்லை.
இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி பிரிவு விழுப்புரம் செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் கரிகாலன் பசுமை மீட்புப்படையைச் சேர்ந்த 30 இளைஞர்கள் நேற்று (ஏப்.22) ரத்த தானம் அளித்தனர்.
இக்குழுவினர் விழுப்புரம் நகரை பசுமையாக்கும் எண்ணத்தில் கடந்த சில மாதங்களாக நகர வீதி முழுவதும் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின் மரக்கன்று தொடர்ந்து நடப்படும் என்று இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகிலன் தெரிவித்தார்.