

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று அறிகுறி காணப்பட்ட முதல் நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்ற நிலை இருந்தது. இந்நிலையில், தற்போது ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக தெரிய வந்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரூர் வட்டம் மொரப்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய லாரி ஓட்டுநரான இவர், காய்கறி பாரம் ஏற்றிச் செல்லும் லாரியை இயக்கி வந்தார். இவர் கடந்த 20 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்து காய்கறி பாரம் ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார். இவ்வாறு சில முறை சென்று வந்துள்ளார். அதேபோல, ஊரடங்கு உத்தரவு அமலாகும் முன்பு லாரியில் பாரம் ஏற்றிக் கொண்டு டெல்லி சென்று ஊர் திரும்பியுள்ளார்.
லாரி ஓட்டுநரின் உடல்நிலையில் தொற்று ஏற்பட்டதற்கான எந்தவித புற அறிகுறிகள் தென்படாத நிலையிலும், இவரது பயண விவரங்களின் அடிப்படையில் அரசுத் துறை அதிகாரிகள் அவருக்கு பரிசோதனை அவசியம் என வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், நேற்று மாலை லாரி ஓட்டுநரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறியதாவது:
அரூர் வட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரின் பயண விவரங்களின் அடிப்படையில் அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு தொற்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை முழுமையாக உறுதி செய்யும் மற்றொரு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அவரது குடும்பத்தார், அவரது வீடு உள்ள பகுதியில் வசிப்பவர்கள், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர் தொழில் தொடர்பாக பயணம் செய்த இடங்கள், சந்தித்த நபர்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறோம். அதன் அடிப்படையில் தகவல் அளிக்கப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவரது வீடு உள்ள கிராமப் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துஉள்ளோம். அங்கே பொதுமக்கள் நடமாடவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் வந்து செல்லவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார். சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.