

மதுரை ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று காலை வந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தனது அன்றாடச் சாப்பாட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.100 வீதம் பிரதமருக்கும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கும் மணியார்டர் மூலம் ‘கரோனா’ நிவாரண நிதிவழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று காலை 65 வயது மூதாட்டி கார்த்திகா பாலநாயகம் என்பவர் வந்தார். அவர், தலா ரூ.100 வீதம் 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் அனைவருக்கும் ‘கரோனா’ நிவாரண நிதியாக இந்த மணியார்டர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவர், தனது காலத்தில் ஒட்டுமொத்த மக்களும் வீட்டிற்குள் முடங்கும் அளவிற்கு இப்படி ஒரு நெருக்கடியான நிலையை நாடு சந்தித்தது இல்லை என்றும், நாட்டின் மருத்துவச் சேவைக்கு தன்னுடைய சிறு பங்களிப்பாக இந்தத் தொகை இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தனது அன்றாடச் சாப்பாட்டிற்காக வைத்திருந்த பணத்தை தான் அனுப்புவதாகவும், யாரிடமும் இதற்காக நன்கொடை பெறவில்லை என்றும் தெரிவித்தார்.