

சென்னையில் கரோனா நோயால் உயிரிழந்த மருத்துவரின் மனைவியிடம் தொலைபேசியில் பேசி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடமும் பேசினார்.
சென்னையில் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலைக் கல்லறையில் புதைக்கச் செல்லும்பொழுது புதைக்க விடாமல் சிலர் தடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் அவரது உடல் அவர் சமூகம் சார்ந்த கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உயிர் இழப்பதற்கு முன் தனது கடைசி ஆசையாக தங்களது சமூக முறைப்படி உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று மனைவியிடம் சைமன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் சைமன் உடலைப் புதைப்பதற்கு கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு ஊழியர்கள் கொண்டு சென்றபொழுது அங்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களைக் கடுமையாக தாக்கினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வேலங்காடு சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அங்கு அவரது உடலை அடக்கம் செய்தனர்.
மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது, அரசு ஊழியர்கள் தாக்கியது தமிழகம் தாண்டி இந்திய அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் இதுகுறித்து விளக்கம் கேட்டது. முதல்வர் இது குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.
மருத்துவர்கள் சங்கம் தனது வருத்தத்தைப் பதிவு செய்து தங்கள் பாதுகாப்புக்காக அரசு செய்ய வேண்டியது குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தியது. சென்னை நகர காவல் ஆணையர் இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என எச்சரித்தார்.
இதுதவிர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக கண்டித்தனர். புதைக்க விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக இதுவரை 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் மனைவி தன்னுடைய கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
அதில் தனது கணவர் கேட்டுக்கொண்டபடி உடல் அடக்கம் நடக்கவில்லை. விரும்பத்தகாத சம்பவங்களால் வேறோரிடத்தில் புதைக்கும் நிலை ஏற்பட்டது. தயவுசெய்து அவருடைய பிணத்தைத் தோண்டி எடுத்து அவரது விருப்பப்படி தங்களது சமூகம் சார்ந்த கல்லறையில் புதைக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த மருத்துவர் சைமனின் மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அவரது கணவர் மறைவுக்கு தனது வருத்தத்தைப் பதிவு செய்த ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவரது மகன், மகளிடமும் ஆறுதலைத் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு எந்நாளும் திமுக துணை நிற்கும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்போது மருத்துவரின் மனைவி முன்னர் இரண்டொரு முறை தனது கணவருடன் திமுக தலைவரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் மனைவி ஆனந்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
மேலும், நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் ஊடகத்துறை நண்பர்ளையும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.