

கரோனா நிவாரணப் பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஜக பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று வெளியிட்ட அறிக்கை:
''உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கரோனாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சினையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவை போற்றுதலுக்குரியது. அதுபோல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப்படுத்தப்படாத காரணத்தால் அந்தச் சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு.
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரபூர்வமாக அமைக்க வேண்டும். இந்தப் பேரிடர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளைச் செய்ய முடியும்.
இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களைக் கொண்டு மாநிலக் குழு ஒன்றும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் உருவாக்க வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் என்பது நிவாரணப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான நபர்களுக்குக் கொண்டு செல்வதற்கும், நிவாரணப் பொருட்களை பல்வேறு நபர்களிடம் பெறுவதற்கும், பிரித்துக் கொடுப்பதற்கும், மக்களின் கருத்துகளை அரசுத் தரப்புக்குக் கொண்டு செல்வதற்கும், விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் உதவும். இக்குழு மூலம் பல்வேறு பணிகளை முன்னின்று செய்ய முடியும்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் உரிய அங்கீகாரத்தைக் கொடுப்பதோடு அவர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசம், போக்குவரத்து உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்பாடு செய்தால், நிவாரணப் பணிகள் புத்துணர்ச்சி பெறும்.
எனவே, தமிழ்நாடு அரசு கரோனா பேரிடர் ஒருங்கிணைப்புக் குழுக்களை உடனடியாக உருவாக்கிடுவது அவசியம்''.
இவ்வாறு தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.