

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், திருச்சி, துறையூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மூன்று நடைபாதை மேம்பாலங்கள் உள்ளன. அதில் பேருந்து நிலையம் அருகே உள்ள நடைபாதை மேம்பாலம் ஒன்று, அண்ணா சிலை அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் வரை செல்கிறது. பேருந்து நிலையம் வரும் மாணவியர், அந்த மேம்பாலம் வழியாக சாலையை கடக்காமல் பள்ளிக்கு செல்லும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேம்பாலம் பூங்காவினுள் செல்லும் வகையிலும், திருச்சி - துறையூர் சாலை அமைக்கப்பட்டுள்ள பாலம் காவல் நிலையத்தினுள் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்று பாலங்களும் கட்டப்பட்ட நாள் முதல் மக்கள் பயன்படுத்துவதில்லை.
இதுஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட மூன்று மேம்பாலமும் ‘குடி’மகன்களின் திறந்தவெளி பாராக அமைந்துள்ளது. பகல் வேளையிலும் பாலத்தின் மேல் சமூக விரோதிகள் மது அருந்துவதால், மக்கள் பாலங்களையும் பயன்படுத்தாமல், வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.
இதுபோல் திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியும் திறந்த வெளியில் குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வழியாக தனியார் பள்ளி அமைந்துள்ளதால், காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். அச்சமயங்களில் பாலத்தின் கீழ் மது அருந்துவோர் அவ்வழியாக செல்லும் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதை காவல் துறையினர் கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள பாலங்களில் மது அருந்துவதை தடை செய்து, மக்கள் பாதுகாப்பாக பாலத்தில் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி இந்து நாளிதழின் உங்கள் குரல் பகுதி மூலமாக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.