

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்தில் இல்லையே என்ற ஏக்கத்தில் அரசைக் குறை சொல்வதாகவும், ஏக்கத்தின் மூலமாக அவருக்கு ஏதாவது காய்ச்சல் வராமல் இருந்தால் சரி என்றும், அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
கோவில்பட்டியில் நகராட்சி சார்பில் புதிய கூடுதல் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் தற்காலிக தினசரி சந்தையில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (ஏப்.22) தொடங்கி வைத்தார். பின்னர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.
இதில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களில் குணம் பெற்று திரும்புபவர்கள் அதிகம். மேலும், கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகப் பரவல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். தொடர்ந்து அரசு எடுத்துவரும் நடவடிக்கையாலும், மருத்துவப் பணியாளர்களின் சேவையாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தமிழக முதல்வர் இன்று காலை கூட 19 பேர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில், மருத்துவக் குழு என்ன அறிவித்தது என்பதை ஆய்வுக் கூட்டத்தின் வழியாக முதல்வர் அறிக்கையாகவோ அல்லது செய்தியாளர் சந்திப்பு மூலமாகவோதான் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும்.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கடமையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கிறோம். அதை டிடிவி தினகரன் குறை சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் அவசர, அவசியம் கருதி சிகிச்சைகள் அளிக்கலாம். இதில் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அம்மா உணவகம் தானாக இயங்கி வருகிறது. அங்கு விலையில்லாமல் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் இயங்கும் அம்மா உணவகத்துக்கு ரூ.6.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களுக்கு விலை இல்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் நிர்வாகத்தில் இல்லையே என்ற ஏக்கத்தில் பேசுகிறார். ஏக்கத்தின் மூலமாக அவருக்கு ஏதாவது காய்ச்சல் வராமல் இருந்தால் சரி".
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.