Last Updated : 22 Apr, 2020 03:15 PM

 

Published : 22 Apr 2020 03:15 PM
Last Updated : 22 Apr 2020 03:15 PM

கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல்

தமிழகத்தில் கரோனா சிகிச்சையின்போது நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. ரத்ததானக் கழக நிறுவனர் எஸ்.சரவணபெருமாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ராணுவ வீரர்களைப் போல் உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிந்து வருகின்றனர்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நோய்த் தொற்றுக்கு ஆளாகி டாக்டர்கள் லட்சுமி நாராயண ரெட்டி, சைமன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் உடலை அடக்கம் செய்ய இடுகாடு அருகே வசிப்பவர்கள் கரோனா தொற்றுக்குப் பயந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மருத்துவர்களின் உடல் திரும்ப எடுத்து வரப்பட்டு வேறு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தச் செயல்களை அனுமதிக்கக்கூடாது. எனவே கரோனா சிகிச்சையின்போது நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை அடக்கம் / தகனம் செய்யும்போது வழங்கப்படும் அரசு மரியாதையை வழங்கி அடக்கம்/ தகனம் செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஏப். 20-ல் மின்னஞ்சலில் மனு அனுப்பினேன். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x