Published : 22 Apr 2020 02:07 PM
Last Updated : 22 Apr 2020 02:07 PM

ஊரடங்கால் உணவின்றி இறக்கும் தெருநாய்கள்: உணவளித்துக் காக்க கோரிக்கை

ஊரடங்கால் கோவை மாநகரில் கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, பீளமேடு, உப்பிலிபாளையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பட்டினியால் உயிரிழப்பது அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தன்னார்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

இதுபற்றி தன்னார்வலர் ஒருவர் சொன்ன தகவல்கள், தெரு நாய்களின் பரிதாப நிலையை உணர்த்துகின்றன.

“கோவை நகர் முழுவதும் சுமார் 6 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கீடு உள்ளது. 3,220 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. முன்பெல்லாம் தெருநாய்கள், ஹோட்டலில் இருந்து கொட்டப்படும் உணவுகள், பல்வேறு இடங்களில் சிந்திக் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டு வந்தன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பது அரிதாகிவிட்டது. எங்காவது உணவு கிடைக்குமா என நாய்கள், கூட்டம் கூட்டமாகச் சாலையில் பசியுடன் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

பல நாய்கள் பட்டினியால் உயிரிழப்பதாக மாநகராட்சிக்குப் புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், தெரு நாய்களின் பசி தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை. பிளாட்பார வாசிகள், விளிம்புநிலை மக்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு வழங்குவதற்கே போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏகப்பட்ட கெடுபிடி செய்கிறார்கள். பசியுடன் காத்திருக்கும் பலருக்கு உதவ முடியாமல் நாங்கள் தடுமாறுகிறோம். இந்நிலையில், தெரு நாய்களைத் தேடிச் சென்று உணவு வழங்குவதும் சிரமமாகத்தான் இருக்கிறது.

நாய்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பாக்கெட் உணவுகளைத் திறந்து வைத்துவிட்டு வருகிறோம். எனினும், அனைத்து நாய்களுக்கும் போதுமான உணவு கிடைக்கிறதா என உறுதிசெய்ய முடியாத நிலைமை இருக்கிறது” என்று அந்தத் தன்னார்வலர் வருத்தத்துடன் சொன்னார்.

இது தொடர்பாக இபான் அமைப்பைச் சேர்ந்த நைஜில் ஓட்டர் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் நாங்கள் தினசரி சுமார் 300 தெருநாய்களுக்கு உணவு மற்றும் பிஸ்கட் வழங்கிவருகிறோம். இதற்காக மாவனல்லாவிலிருந்து நான்கு வாகனங்களில் நாய்களுக்கான உணவு கொண்டு செல்லப்படுகிறது. இது மட்டுமல்லாது இங்கே சுற்றித்திரியும் முப்பதுக்கும் மேற்பட்ட குதிரைகளுக்கும் தீவனம் வழங்குகிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகமே ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியிருக்கிறது. அந்தத் தொகையுடன் கூடுதல் நிதி போட்டுத்தான் இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம்.

டெல்லி, கோவா தொடங்கி இந்தியா முழுக்க லட்சக்கணக்கான தெருநாய்களுக்கு 20 வருடங்களாகக் கருத்தடை ஆபரேஷன் செய்துவருகிறோம். இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாகப் பசியால் நாய்கள் இறக்கும் தகவல் வந்ததால், சென்னை மாநகராட்சி தொடங்கி, தமிழகத்தின் எல்லா மாநகராட்சி, நகரப் பகுதிகளிலும் நாய்களுக்கும், இதர விலங்குகளுக்கும் தன்னவார்வலர்கள் உணவு வைப்பதைத் தடை செய்யக்கூடாது என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டால் பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றலாம்” என்றார்.

உணவுக்காக மனிதர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்களைக் கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம் அவற்றுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x