Published : 01 Aug 2015 02:13 PM
Last Updated : 01 Aug 2015 02:13 PM

சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு

"மதுவிலக்கு போராட்ட களத்தில் உயிர்த் தியாகம் செய்த காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி அருகே மதுக்கடையை அகற்றுகிற போராட்ட களத்திலேயே தம் உயிரை தியாகம் செய்திருக்கிறார் காந்தியவாதி சசிபெருமாள். வரலாற்றுப் பெருமைமிகு தமிழகம் மதுவின் பிடியில் சிக்கி சீரழிகிறதே என்ற பொறுப்புள்ள குடிமகனின் கோபக் கனலாக 40 ஆண்டுகாலமாக மதுவிலக்குக்கான போராட்டத்தை தன்னெழுச்சியாக நடத்தி வந்தவர் காந்தியவாதி சசிபெருமாள்.

சசிபெருமாள் உன்னத லட்சியத்துக்காக போராட்டம் நடத்தியவர். அந்த போராட்ட களத்திலேயே தம் உயிரை தியாகம் செய்து தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறார். மறைந்த தியாகி காந்தியவாதி சசிபெருமாளின் வாழ்நாள் லட்சியமான மதுவிலக்கை படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றுவதாக அறிவிப்பதுதான் அந்த பெரியவருக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

இந்த தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக போராடி அந்தக் களத்திலேயே உயிரிழந்திருக்கும் சசிபெருமாளின் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்; வறுமையில் வாடும் காந்தியவாதி சசிபெருமாளின் மனைவி மகிழம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு பணிவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இப்படி தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எதுவுமே சேர்த்து வைக்காமல் சொந்த குடும்பத்தையும் கவனிக்க இயலாமல் வாழ்நாளெல்லாம் மக்களுக்காக போராடுகிற போராளிகளை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும். தமது குடும்பத்தை விட நாட்டு மக்களின் குடும்பங்களின் மீது அக்கறை கொண்டு போராடுகிற காந்தியவாதி சசிபெருமாள் போன்ற போராளிகளின் குடும்பங்களைக் காப்பாற்றுகிற பெரும் கடமை அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் இருக்கிறது.

இதனடிப்படையில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக மது எனும் கொடூரத்தின் பிடியில் இருந்து தமிழகம் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக 40 ஆண்டுகாலம் போராடி அந்த போராட்ட களத்திலேயே மரணித்த காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பத்தினரின் ஏழ்மையை கருத்தில் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x