

விழுப்புரம் நகரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என, வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 76 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடைகள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விழுப்புரம் நகரில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டும் கடைகள் திறக்கப்படும். இக்கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இயங்கும்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட வண்ண அட்டைகளின் பயன்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிடும். அதன்படி, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.