

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 90 பேர் மீது டி.பி.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் வசித்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். இவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய, முதலில் கீழ்ப்பாக்கம் கல்லறை பகுதிக்கு கொண்டு சென்றனர்.அப்போது, அங்கு 90-க்கும் மேற்பட்டவர்கள், அவரது உடலை அடக்கம் செய்யஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
21 பேர் கைது
இதையடுத்து வேலங்காடு கல்லறைக்கு அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கும் மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்புடன் நேற்றுமுன்தினம் அதிகாலை வேலங்காடு கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக 21 பேரை அண்ணாநகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 90 பேர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலைய போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.